நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Tuesday 21 July 2015

அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.

தமிழ்க்குடில் அறக்கட்டளை-Thamizhkkudil Trust நடத்திய  கட்டுரைப்போட்டி

2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - முதல் பரிசு

கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
முதல் பரிசு பெற்றவர் : முனைவர். ஜ. பிரேமலதா, தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, சேலம்-7 

நடுவர் குறிப்பு: இக்கட்டுரை அன்னை தொடர்பான அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கி முழுமையும், தெளிவும் எளிமையும் உடையதாக அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

தலைப்பு                        : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.


ஒவ்வொரு மதத்திலும் எத்தனை கடவுளர்கள். சில மதங்கள் பெண்களை மிகுதியாகக் கடவுளாக வழிபடுகின்றன. சில மதங்களில் பெண்கள் வழிபடப்படுவதுமில்லை. இஃது அவரவர் சமய, மத உரிமை. ஆனால் எந்தச் சமயமாக, மதமாக இருப்பினும் தாயை ஒரு தெய்வமாகப் போற்றாத மதமோ சமயமோ இல்லை. உலகின் அனைத்து மதங்களும் சமயங்களும் தாயைத்தான் முதலில் போற்றுகின்றன. இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்றுபடும் இந்தக் கருத்தினை அனைவரும் உணர்ந்தால் உலகில் எதற்கித்தனை கடவுளர்கள்?


எதற்கிந்த சாதி, மத, இன சமயச் சண்டைகள்? ஒரு மதத்திற்குள்ளேயே எத்தனை முரண்பாடுகள்? தாய் என்னும் பெயரிலேயே வீட்டிலேயே தெய்வமிருக்க எதற்கிந்த கருத்துவேறுபாடுகள்? இறைவனை அடைய பல வழிகளைச் சமயங்கள் கூறுகின்றன. எனினும் எல்லா மார்க்கங்களையும் ஒருசேர அடைய தாயின் பாதத்தை வணங்கினால் போதும்.
ஆனால் அந்தத் தாய்க்கு கடவுள் யார் தெரியுமா? ஒரு தாயின் மனம் எங்கிருக்கும்? அது பிள்ளைகளையே சுற்றி வரும். அவள் பற்று வைத்த பரம்பொருள் யார்? வேறு யார்? பிள்ளைகள்தான். தன் குழந்தைகளின் நலன் ஒன்றைத் தவிர வேறொன்றையும் சிந்தித்தறியாத தாயை விடச் சிறந்த உறவு உலகில் இல்லை. குழந்தைகளுக்காகத் தன் உடல்நலனையும் பாராது தொண்டாற்றும் தாயன்றி உலகில் வேறோர் தெய்வமுண்டோ?
ஒவ்வொரு இல்லங்களும் ஆலயம்தான். அன்னை என்னும் கடவுளை உணர்ந்து வணங்கி வந்தால் கோயிலுக்கே போகத் தேவையில்லை. ஆண்டவனை நம்பாதவர்கள் கூட அன்னையை நம்புவார்கள். உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. பற்றுகளிலிருந்தும் விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம். ஒரு துறவியை, அவரைப் பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால், தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால், அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழ வேண்டும். தந்தைகட்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

இசுலாமியக் கவிஞர்.கா.மு.ஷெரீப் “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை”என்கிறார்.
சுயநலப் பற்றற்ற நிலையில் வாழும் தாய், இன்ப வாழ்விற்குச் சுயநலத்தை நீக்கி வாழ வேண்டும் என்ற உரிய தத்துவத்தை வாழ்ந்து காட்டியே உலகிற்கு உணர்த்த முயல்கிறாள். கடவுளின் அன்பு, கருணை நம்மில் சிலரால் கூட உணர முடியாதது. ஆனால் அவர்களுக்கும் தாயின் அன்பு உணரக் கூடியதே. தாயன்பைப் புரிந்து கொண்டவர்களால் தாயின் அன்பு மூலமே கடவுளை நாம் தரிசிக்க முடியும்என்பதும் புலப்படும்..
மதச் சார்பற்றவர்களின் மனதிலும் தாயின் வாழ்க்கை குறித்த பதிவுகள் நிச்சயம் சலனத்தை ஏற்படுத்தும்.
தாய்மையின் ஆற்றலையும், பண்பு நலன்களையும் உணர்ந்த மனிதன் தன்னைக் காக்கும் நடமாடும் தெய்வமாகவே தாயை ஆதிமுதலே வழிபட்டு வந்துள்ளான். தாயைத் தெய்வமாக வழிபடும் மரபு சுமேரியா, எகிப்து, அசிரியா, பாரதம் முதலான நாடுகளில் உண்டு.

பிள்ளைகள் தன்னைப் போற்ற வேண்டும், தெய்வமாக வணங்க வேண்டும் என்று நினைத்து எதிர்பார்த்து எந்தத் தாயும் தன் பணியைச் செய்வதில்லை. பிள்ளைகளில் வெற்றிகளின் பின்னால் எங்கோ ஓரிடத்தில் இன்னும் ஒன்றும் அறியாதவள் போலவே ஒவ்வொரு தாயும் நின்று கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை.
சுயநலப்பற்றற்ற நிலையில் உலகில் தாய் ஒருத்திதான் இருக்கின்றாள். சுயநலத்தை நீக்கல் வேண்டும் என்னும் கோட்பாட்டைத் தாய் ஒருத்தியிடமிருந்தே மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடியும். கடவுளின் அன்புக்கு அடுத்தபடியில் இருக்கிறது தாயின் அன்பு. ஆதலால் தாயின் அன்பு மூலமே கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.
“இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அன்பு நீரைப் போன்றது. நீரை எந்தக் குவளையில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைப் பெறும். நம்மைத் தாங்கும் நிலத்தை விடத் தாய் பெரியவள். தாயை விட எதுவும் பெரிதில்லை. ஆயுள் முழுவதும் குடிக்கும் குடிநீரைப் போன்று மிக அவசியமானவள். எனவேதான், தாயை பூமியோடும், நீரோடும் ஒப்பிடுகின்றார்கள் கவிஞர்கள்.
தாயின் அன்பு, தூய அன்பு. விளம்பரம் எதிர்பார்க்காத அன்பு, பாராட்டு எதிர்பார்க்காத அன்பு.. துயரத்தில் தோள் கொடுப்பவன் நண்பன், துயரப்படுபவர் ஊரார், கண்ணீரைக் துடைப்பவள் மனைவி, உயிரையே கொடுக்க முன் வருபவள் தான் தாய். அப்படிப்பட்ட பண்புடைய தாய் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தன் மக்களின் உயர்விற்காக அர்ப்பணிப்பவள். ஆனால் அதைச் சொல்லிக் காட்டக் கூடத் தெரியாதவள்.

ஒவ்வொரு தாய்க்கும், பிள்ளைகளின் நலனே குறிக்கோள். எத்தனைப் பணிகளைப் பிள்ளைகளுக்குச் செய்தாலும் அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாதவள்தான் ஒவ்வொரு தாயும். ஒரு தாய்க்கு பகல் நேர ஓய்வு, இரவு நேர ஓய்வு இரண்டும் எப்போதுமில்லை. எனினும் அவள் பணியை உணராத உள்ளங்களும் இந்த உலகில் உண்டு.
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு ஆழ்ந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக்கொட்டும் அமுதசுரபி கரங்களைக் கொண்டுள்ளவள்  தாயன்றி வேறு யார்? குழந்தை ஒல்லியோ, குண்டோ, அழகோ, அசடோ, கறுப்போ, வெள்ளையோ அதுவெல்லாம் தாய்க்கு ஒருபொருட்டேயில்லை. பிள்ளைகளிடம் தாயின் மனம் இதுபோன்ற விசயங்களில் எப்போதும் குறை காணாது. எப்படி இருந்தாலும் தாய்க்குத் தன் பிள்ளை பொன் குஞ்சுதான். அவளைத் தவிர வேறு யாராலும் தன் குழந்தை எப்படியிருந்தாலும் நேசிக்க முடியாது.
உலகிலுள்ள ஒவ்வொன்றும் ஒன்றைறொன்றை எதிர்பார்த்தே விரும்புன்றது. ஆனால் எதிர்பார்ப்பில்லாத அன்பு தாயன்பு ஒன்றுதான். தான் பெற்ற மக்கள் தன்னை வெறுத்தாலும், கோபமாகப் பேசினாலும் அன்பினாலே அதையெல்லாம் வென்றிடும் பக்குவம் தாயிடம்தான் உள்ளது. தனது குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள் தாய்தான். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள் தாய்தான்..

தாயென்பவள் உள்ளுணர்வால் உந்தப் பெற்ற உயர் தத்துவஞானி. தாய்தான் அனைத்திற்கும் மூலாதாரம். ஆணிவேர். யார் இல்லையெனில் இந்த உலகிற்கு வந்திருக்க முடியாதோ, யார் நம் வாழ்வின் அனைத்து நலங்களையும் துவக்கி வைக்கிறாரோ அவரே தெய்வம். அந்தத் தாயை வணங்குவதுதானே முதற்கடமை?

புண்ணியங்களுக்கேற்றார் போல் பலன் அருளும் தன்மை பகவானுக்கு உண்டு.ஆனால் பத்துமாதம் தன் குழந்தைக்கன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் பாகுபாடு பாராமல் கருணைகாட்டக்கூடியவள் தாய்தான்  என்பதை ஒரு சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.! ஈரானில் ஒரு தாயின் மகனை ஒருவன் கொன்றுவிடுகிறான் “கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணத்தில், படுகொலைக் கைதியை அவரால் கொல்லப்பட்ட இளைஞனின் தாய் முகத்தில் அறைந்து மன்னித்துவிடுகிறாள்.  நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஈரானில் நடந்துள்ளது. தனது மகனைக் கொன்ற படுகொலையாளிக்கும் மன்னிப்பளித்த தாயை உலகம் கொண்டாடியது.
ஆண்மகன் அல்லது பெண்மகள் ஆகியோர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது தங்களுக்கு எவ்வளவு வயதான பின்பும் தங்களுடைய தாயின் மடியில் தலை வைத்து படுத்தாலே தங்களுக்குக் கவலையெல்லாம் மறந்து போகும் சூழ்நிலை இன்றும் உள்ளது.
வயதான பின்னும் ஒரு தாயின் பணிகள் ஓய்வதில்லை. ஒரு தாய்க்கு எப்போதும் ஓய்வில்லை. பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என ஒரு தாயின் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல், முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் சேர்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை!
ஒரு தாய் தன் பிள்ளைகளைப் பெறுவதற்காக அழலாம். பெற்றதற்காக அழக்கூடாது. பிரசவ வேதனையைவிடக் கொடுமையானது பிள்ளை தன்னை முதியோர் இல்லத்தில் தள்ளும் போது ஏற்படும் வலி. அப்போதும் கூடத் தாய் தன் மக்களின் நல் வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்வதிலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடுவாள்.
‘ “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?” என்கிறது ஒரு திரைப்படப்பாடல். இந்தப் பாடல் கூறும் உண்மையை உணராதவர் என்ன பெற்று என்ன பயன்? தாயை மிஞ்சிய சொத்து எதுவுமில்லை. பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது என்பர். காமராஜர் தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பிவைத்தார். கலைஞர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் தாயைத் தெய்வமாகத் தொழுதிடும் ஆத்திகர். எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அம்மா என்ற சொல்லின் ஆழம் கண்டவர்கள். இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர்ந்தவர்களே தவிர, வீழ்ந்தவர்களில்லை.
பெற்றோர் மகனிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது. ஆழமானது. மகன் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் அறிவுபூர்வமானது. உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது. அறிவால் எழுகிற பாசம் கடமை உணர்வுடையது. பெற்றோரைப் பிள்ளைகள் புறக்கணித்தால் நாளை தங்களுக்கும் இதே நிலைமைதான் என்பதை நினைத்துப் பார்த்தாலே கடமையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். படிப்பதற்காகப் பிள்ளையை வெளியூருக்கு அனுப்பும் தாயின் கண்ணீரிலுள்ள பாசத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை ஒருபோதும் கடமை தவறாது.
ஆனால், பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது. தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் சிலர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், ஆதரவற்று நிற்கும் பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.
பிள்ளைகள் வசதி வாய்ப்போடு வாழ்ந்தும், முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுகின்ற சூழல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 50 கட்டண முதியோர் இல்லங்கள் உள்ளன. இங்கிருப்பவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். இவர்களில் 60 விழுக்காட்டினர் உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றித் தவிக்கின்றனர் என்றது ஒரு புள்ளி விவரம். .
நடைமுறைகளைக் கூர்ந்து கவனிக்கிற பொழுது, சமூகச் சிக்கல்களுக்கான தீர்வுகள் சமூகத்திற்குள்ளேயே இருக்கிறது என்று புலப்படும். மனத்தின் ஆழத்தில் பதிந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே அதற்கான விடியலையும் தரும். எங்கும் தேடிப்போகத் தேவையில்லை. புதிது புதிதாய் மனித உறவுகளில் முடிச்சுகள் விழுந்துகொண்டிருக்கின்றன. காலங்கள் மாற மாறப் புதிது புதிதாய் சிக்கல்களும் முளைத்துக் கொண்டுதான் உள்ளன. அதற்கான விடியல் நம் கதவை வந்து தட்டாது. நாம்தான் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். எதையும் அலட்சியப்படுத்தாமல், எல்லாவற்றிலும் அக்கறை கொண்டு, உற்றுப் பார்த்து உண்மை தேட வேண்டும்.


இன்றைய நவீன உலகில் வாழ்ந்து வருகின்ற இளைய தலைமுறையினர் தொலைக்காட்சி, சினிமா, தொலைபேசி, அலைபேசிகளினால் சீரழிந்து வருகின்றனர். பண்பாட்டு மாற்றம் விசக் காய்ச்சல் போல் நாளும் பரவி சமூகத்தின் ஆணிவேரான குடும்ப அமைப்பையே தகர்த்து வருகிறது. அந்நியக் கலாச்சாரச் சூழலில் நாம் சுயத்தைத் தொலைத்து வருகிறோம். இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்புச் சமூகத்திற்கு உள்ளது. முதிய அன்னையர்கள்தான் பண்பாட்டை மீட்டெடுக்க உதவ முடியும்.
முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சிறப்பு. இப்படிப்பட்ட முதியவர்களோடு வாழும் இளம்பிள்ளைகளும் உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொள்ளும். குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், சமூகத்திற்கும் அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை. முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டுதல் இளைய தலைமுறையினருக்கு அவசியம். வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் முதியவர்கள் சுமையாகக் கருதாமல், வரமாகக் கருத வேண்டும். குடும்பத்தில் பெற்றோர் முதியவர்களை அரவணைத்துப் போற்றிப் பாதுகாக்கும் பொழுது, அதைப் பார்க்கும் குழந்தைகளும் அவர்களிடத்தில் மதிப்பு கொள்வர். உயர்ந்த பண்புகளைப் பெறுவர். கூட்டுக் குடும்பம் உறவுகளை மேன்மை படுத்தும். குடும்ப உறவுமுறைகளில் ஒவ்வொருவருக்குள்ளும் இடையே அன்பு என்னும் பிணைப்பு தேவை. இந்தப் பிணைப்பு வலுப்படக் காரணமாக இருப்பவர்கள் அன்னையர்களே.
ஒரு குழந்தைக்கு மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்திற்கும், ஒரு சமூகத்திற்கும் தன் கடமை, சுயநலமற்ற தொண்டு, வற்றாத அன்பு, நற்பண்புகள், அனைவரையும் அரவணைக்கும் மேன்மை போன்ற குணங்களால் மாபெரும் சொத்தாக விளங்கக் கூடியவள் அன்னைதானே? அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கும் அன்னையை, முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் சிலர், தாங்களும் தங்கள் குழந்தைக்கு தம்முடைய பண்பாட்டைச் சொல்லித் தராமல், இறுதியில் எந்தப் பண்பாடுமின்றி  இரண்டுங்கெட்டான்களாக தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.
 கணவன் மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய சூழலில் குழந்தைகள் அன்பிற்காக ஏங்குகின்றன. தவறான பாதைக்கு செல்லத் தொடங்குகின்றனர். வீட்டில் வயதான தாயிருந்தால், தாயின் அனுபவத்தின் முதிர்வு குழந்தைகளைச் சரியான நிலைக்குத் திரும்பக் கொண்டு வந்து விடுகிறது. இளமையும் முதுமையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விட்டால் இச்சமூகத்தில் வன்முறை ஏது? பிரிவினை ஏது? குடும்பத்தில் சமூகத்தில் துன்பத்திற்கு இடமேயில்லை.
இன்றைய நிலையில் கணவன், மனைவி இருவரும் பணிபுரிய சூழலில் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்படுகின்றது. அன்றாடம் பிரச்சனைகளின் நெருக்குதலில் தான் குடும்பம் இயங்குகிறது. இன்றைய வாழ்வில் குழந்தைகள், பெற்றோர்கள், கணவன், மனைவி, ஆண்கள், பெண்கள் என்று அவரவர்களுக்கெனத் தனியாகவும், பொதுவாகவும் ஏதாவது சிக்கல்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் இல்லத்தில் அனுபவம் சான்ற ஒரு முதியவர் இருந்தால் அவர்கள் மிக எளிதாகச் சிக்கலை உணர்ந்து, பற்றி எரிவதற்குள் ஊதி அணைத்து விடுவர். எந்தத் தாயும் தன் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களின்போது தலையிட்டு எச்சிக்கலையும் பெரிதாவதற்குள் அதை ஒன்றுமில்லாமல் செய்து விடும் ஆற்றலை இயற்கையிலேயே பெற்றிருக்கிறாள்.

இன்று இப்படிப்பட்ட அனுபவம் சான்ற அக்கறையுள்ள முதியவர்களையெல்லாம் முதியோர் இல்லத்தில் தள்ளி வைத்துவிட்டு சிறிய சிக்கல் என்றாலே கோர்ட், விவாகரத்து என்று தனித்தனியாய் நிற்கும் அவலத்தை மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இன்றைய வேகமாக ஓடும் வாழ்க்கையில் அதிக நேரம் முதியவர்களிடம் செலவழிக்க முடியாத மனிதக் கூட்டங்கள் தான் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
முதியவர்கள் எதிர்பார்ப்பது அன்பான இதமான விசாரிப்பும், கனிவான பேச்சும், இளையவர்களின் இதயத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் இடமும்தான். அதை உணராமல் அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதால் யாருக்கு நன்மை?
தெய்வமாகத் தொழவேண்டிய அன்னையை நாளும் தொழாவிட்டாலும், அவளை முதியோர் இல்லத்தில் தள்ளாமல் எத்தனைச் சிக்கலிருந்தாலும்,  தன் தாயைத் தன்னுடனே வைத்துக்கொண்டு தன் குடும்பத்தில் அவளுக்கும் ஓரிடம் கொடுக்கும் பிள்ளைகள் வாழும் நாடே வளமான நாடு.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?