நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 5 March 2014

தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?



தொல்காப்பியர் கூறும் நூல் பூணூலா?

 

முன்னுரை

தொல்காப்பியர், பொருளதிகார மரபியலில்  நான்கு வருணத்தாருக்குரியப் பொருட்களைப் பற்றிக் கூறுமிடத்து,நூல் என்ற சொல்லையும் குறிப்பிட்டிருக்கிறார். இச்சொல் தொடர்பாக உரையாசிரியர்கள் பலரும் பலவித கருத்துக்களைக் கூறியுள்ளனர். இக்கருத்துக்களிலுள்ள சாதியச் சார்புத் தனைமையைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

நூற்பா

நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (bjhš. 3: 615)
இந்நூற்பாவிற்குரிய பொருள் அந்தணர்களுக்குரிவை நூல்,கரகம்,முக்கோல்,மணை என்ற நான்கு பொருட்கள் என்பதாகும்.

1.நூல் - நூல் என்பதற்குப் பூணூல் என உரையாசிரியர்கள் பலரும் பொருள் கொண்டுள்ளனர்.(இதைப் பற்றியே இக்கட்டுரை ஆராய்கிறது.)

2.கரகம் – சிறிய பானை

3.முக்கோல் -உயிர் மூலப்பொருளின் விகாரமாகிய உடம்பைக் கொண்டிருத்தல் போல் இறைவன் உடம்பு, உயிர் இவையிரண்டையும் தனது உடம்பாகக் கொண்டுள்ளான். இறைவன்,உடல்,உடம்பு என்ற  இம்மூன்று தத்துவங்களும் ஒன்றை விட்டொன்று பிரியாமல் எக்காலத்தும், தத்தம் இயல்பை விடாமல் ஒன்று சேர்ந்துள்ளன என்பதை விளக்கவே இறைவனை வழிபடுபவர்கள், துறவிகள் மூன்று கோல்களை ஒன்றாகப் பிணைத்து கையில் வைத்திருப்பர். இதை "முக்கோல்" என்பர். துறவிகள் இவ்வாறு முக்கோல் ஏந்தும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருப்பதை தொல்காப்பிய செய்யுள் வரிகளால் அறியலாம்.

4.மனை – அமருவதற்குரிய சிறிய பலகை.

உரையாசிரியர்கள் கருத்து


 இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நூல் என்னும் சொல்லுக்குத்தான் உரையாசிரியர்கள் பலரும் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர்.
இங்கு குறிப்பிடப்படும் நூல் என்பது எது?
உரையாசிரியர்களின் கருத்துகளை முதலில் பார்ப்போம்.
தொல்காப்பிய முழுமைக்கும் உரை வகுத்த இளம்பூரணர், ‘நூலும் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய‘ என்கிறார்.
உரையாசிரியர் பேராசிரியர் அவர்கள், (இ.சுந்தரமூர்த்தி பதிப்பு)நூலினை முற்கூறினான் பிறப்பு முறையானுமென்பது .இனிக் குடுமியுங் குசையம் (தருப்பை) போல்வன...குண்டிகை-நீர் முகந்து வைத்திருக்கும் கலம். யாமை மனை-யாமை வடிவால் செய்த இருக்கைப்பலகை....பிறப்புமுறை-அருபிறப்பாளன் என்னும் பிறப்பு முறை. சிறப்பு முறை – நூல் தாங்கிய பின்னரே கரகம் முதலிய தாங்குதல் பற்றிய சிறப்பு முறை”(ப.636-637) என்கிறார். இங்கு, பேராசிரியர் பிறப்பு முறையால் பெறப்படுவது நூல் என்பதினால் அது பூணூலையேக் குறிக்கிறது எனலாம்.
உரையாசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம் அவர்கள்,முப்புரிநூல் அணிவது ஏழு வயதுப்பருவத்தில் அந்தணச்சிறுவர்களுக்குச் செய்யும் சடங்குமுறை. இருபிறப்பாளர் எனலும்ஆம்.” (ப.482)என்கிறார்.இங்கு வெளிப்படையாகவே பூணூல் எனக் குறிப்பிடப்படுகிறது.
தமிழண்ணல் அவர்கள், அந்தணர்க்குரியவை முப்புரிநூல், கமண்டலம்(கரகம்), முக்கோல் தண்டு, மனை இருக்கை ஆகியன. நூல்-முப்புரிநூல் கரகம்-கமண்டலம்.என்கிறார்.
ஞா.மாணிக்கவாசகன் என்பார்,நூல்-சுவடி (முப்புரிநூல் என்பாரும் உண்டு.)என்று நூல் என்பதற்கு சுவடியாக இருக்கலாம் என ஊகித்துள்ளார்.
பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்,“முந்நூலும்(முப்புரிநூல்) கமண்டலமும்,முக்கோலும்,இருக்கை மனையும் அந்தணர்க்குரிய உடைமையாகும்என்பதோடு முப்புரிநூல் அந்தணர்,அரசர் தவிர்ந்த ஏனையோர் நூல் பூணுதல் ஆரியர் வழக்கமாகும்....முந்நூலும் மனையும் பொது. கரகமும் முக்கோலும் துறவு பூண்டோர்க்குரியவாகும் என்கிறார்.(ப.211-212).இங்கு பாலசுந்தரம் அவர்கள், ஆரிய மரபில் அந்தணர்,அரசர் தவிர்த்தவர்களுக்கும் பூணூல் அணியும் வழக்கம் இருந்தது என்கிறார்.
      தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல் என்றால், தமிழகத்தில் அந்தணர் எனப்படும் (ஆரியர்கள்) பார்ப்பனர்கள் மட்டும் பூணூல் அணிபவர்கள் அல்லர். தொல்காப்பியம் சொல்லுகின்ற அனைத்து வர்ணத்தவருமே பூணூல் அணிபவர்கள்தான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்டவர்களாகச் சொல்லப்படும் பறையர் சமூகத்தவர், தாங்கள் பூணூல் அணிவது குறித்து இன்றுவரையிலும் பாடிவரும் பாடல்களை வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.  

"முந்திப் பிறந்தவன் நான்
முதல் பூணூல் தரித்தவன் நான்
சங்குப் பறையன் நான்
சாதியில் மூத்தவன் நான்"
-
என்கிறது அப்பாடல்.
 

இணைய உலகிலும் இது தொடர்பான தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.

சாதிப் பிரிவுகள் அற்றுச் சமத்துவ வாழ்வு வாழ்ந்த தொல் தமிழ்க் குடியில், தொல்காப்பியர் காலத்திலேயே பிளவுகள் தொடங்கி விட்டன. அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்கிற நால்வகைப் பிரிவும் செய்யுந் தொழிலின் அடிப்படையில்தான் முதலில் அமைந்தது. பின்னர் அதுவே சாதியச் சழக்காய் நிலைத்து விட்டது என்று சமூக ஆய்வாளர்கள் சிலர் எழுதுகின்றனர். ஆனால், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்திலேயே பார்ப்பனரின் முதுகில் பூணூல் மாட்டப்பட்டு விடுகிறது.என்கிறார் தமிழேந்தி.http://www.sooddram.com/Articles/otherbooks/Mar2013/Mar252013_Tamilenthi.htm

“அந்தணராகிய பார்ப்பனருக்கு, நூல் (பூணூல் அல்லது உபநயனம்), களுகம் (கமண்டலம்), முக்கோல் (திரிதண்டம்) மணை _ (ஆசனப்பலகை), இவை உரியவையாகக் கூறப்பட்டுள்ளன.என்கிறார் ப்ரவாஹன்.

மின்தமிழ் என்னும் இணையக்குழு விவாதத்தில் சேசாத்திரி ஸ்ரீதரன் என்பவர், “மரபியலில் நால்வகை வருணம் இடம் பெற்றிருப்பது இடைச்செருகல் ஆகும். தொல்காப்பியர் எழுதியதில்லை அது. அச் செய்திகளில் கூறப்படும் இடம், சூழல் ஆகியவற்றை காணும் போது அது இடைச் செருகல் எனத் தெற்றெனத் தெரியும்.தொல்காப்பியம் பொருளதிகார மரபியலில் உயிரினங்களை, அவற்றின் பெயர்களை விளக்கிக் கொண்டு வரும் போது 71 ஆவது நூற்பாவாக  வருணம்  பற்றிய செய்தி வருகிறது. அதிலிருந்து 85 ஆவது நூற்பா வரையிலும் அது தொடர்பான செய்திகளே கூறப்படுகின்றன. 86 ஆவது  நூற்பா, விடுபட்டுப் போன மரபியலின் தொடர்ச்சியாக 'புறக் காழனவே புல்லெனப்படுமே'  என விளங்குகிறது. அறிவியல் செய்திகளுக்கு ஊடாக சமூகவியல் கொள்கை இடம் பெற்றிருப்பது முற்றிலும் பொருத்தமாக இல்லை. எனவே, வருணம் பற்றிய தொல்காப்பியர் காலத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் சமூகச் செல்வாக்கு பெற்ற ஒரு பிரிவாக இல்லவே இல்லை. எனவே தொல்காப்பியர் நால் வருணம் பற்றி பேச வாய்ப்பில்லை. அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே!என்கிறார். 
https://groups.google.com/forum/#!msg/mintamil/HVn67fkusMw/S0Yfw9PAeeEJ  

மேலும்,பிரவாஹன் என்பவர், “பூணூல் அணியும் பழக்கம் ஆரியர்களுடையது அல்ல. ஆப்பிரிக்காவின் எகிப்பது நாட்டிற்கு ஆரியர்கள் செல்வதற்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. அதில் உள்ள உருவங்கள் சிலவற்றில் பூணூல் போன்று மார்புக்குக் குறுக்கே வரையப்பட்டுள்ளது. அது பூசாரிகளின் ஓவியங்களாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், பூணூல் அணிதல் என்பது சூரிய வழிபாடு தொடர்புடைய ஒரு மதச் சின்னம். இஸ்லாமியர்கள் தலையில் குல்லாய் அணிவது போல இது ஒரு மதச் சின்னம் அவ்வளவே. இது குறித்து விரிவான விளக்கங்கள் உண்டு. மேலும், மரபாக இருந்துவரும் ஞானவெட்டியார் பாடல்கள்,  
"... ... பூணூலந்
தரணிமுத லென்பறையில் தழைத்த தாண்டே"
பூணூல் தரித்துக் கொள்ளுவோம் - சிவ சிவ
பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம்
வேண விருதுகளும் விகிதமாய்
வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்"
பூணூல் பிறந்ததெங்கே -சிவசிவ" http://saanron.webs.com/katuraikal.htm  என்று சான்று காட்டுகிறார்.

உண்மையில் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் பூணூல்தானா? என்றால் இல்லவே இல்லை என்பதே ஆய்ந்தபின் கிடைத்த பதில்.               

தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பதை பூணூலாகக் கருதியதன் விளைவே இச்சர்ச்சைகளுக்குக் காரணம்.
பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும் பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல் குறிக்கிறதா எனபதை சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணுலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப் புலப்படும்.
நூற்பாவினை ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய (bjhš. 3: 615)
அந்தணராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில் எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள்.ஆனால்,தொல்காப்பியர்,அந்தணர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.
கையில் நூலை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்?
நூலை அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச் செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு புரிநூல்என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது
முனிவர்கள் கரண்டைஎனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன உறியானது சிமிலிஎன அழைக்கப்பட்டுள்ளது.
""""கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர"" (மதுரைக் காஞ்சி. 483-484)
கல்லினால் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினையுடைய கரண்டை எனப்படும் சிறிய பானையைப், பல புரிகளுடைய நூலைக்கொண்டு கட்டி, அந்நூலை கையால் பற்றிய படி எடுத்துச்சென்றனர் என்பது இதன் பொருளாகும். இந்நூல் சிமிலி என்றழைக்கப்பட்டுள்ளது. (கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே, ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.)
மணிமேகலை சிமிலியில்கரண்டை எனப்படும் பானையை வைத்து எடுத்துச் செல்லும் முனிவர்களைச் சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது.
கலித்தொகை உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை).
"எறித்தரு கதிர்தாங்கி   ஏந்திய குடைநீழல்
 
உறித்தாழ்ந்த கரகமும்   உரைசான்ற முக்கோலும்
 
நெறிப்படச் சுவல்அசைஇ  வேறோரா நெஞ்சத்துக்
 
குறிப்பேவல் செயல்மாலைக்    கொளைநடை அந்தணீர்" (பாலைக்கலி.9) என்ற வரிகளால் இதை அறியலாம்.
தொல்காப்பியர் எங்குமே தோளில் அணியக்கூடிய நூலைப் பற்றிக் குறிப்பிடவில்லை. கையில் எடுத்துச்செல்லும் நூலையே குறிப்பிடுகிறார் என்பதை இதிலிருந்து அறியலாம். எனவே, பிறப்பாலல்லாமல் தகுதியாலும், புலமையாலும், துறவுத் தன்மையாலும், அந்தணர் என்ற பிரிவைத் தொல்காப்பியர் கருதியுள்ளார் எனலாம். எவ்வருணத்தாராக இருந்தாலும்,துறவு மேற்கொண்டுள்ளவர்கள் அந்தணர்கள் என அழைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களாக உறிநூல், சிறிய பானை, முக்கோல்,மனை போன்ற பொருட்கள் இருந்துள்ளன.பிற்காலத்தில் மண்பானையை விடுத்து, பித்தளை மற்றும் செம்பு போன்ற பொருட்கள் புழக்கத்தில் வந்த காலத்து அவ்வுலோகங்களினால் ஆன கைப்பிடிகள் தூக்கிச்செல்வதற்கேற்ற வகையில் கரகத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 முடிவுரை




தொல்காப்பிய மரபியல் நூற்பாவில் காணலாகும் ஒரு சொல்லிற்கு உரையாசிரியர்கள், சாதி மற்றும் வருணச்சாயம் பூசி,அதில் தங்கள் கருத்தை ஏற்றிப் பலவாறாகப் பொருள் கொண்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் விவாதங்கள் நடந்தபடியே இருப்பதுதான் பெரு வியப்பு. நடுநிலைமையோடு அணுகியிருந்தால் தொல்காப்பியர் குறிப்பிடும் நூல் என்பது கரகம் எடுத்துச்செல்ல உதவும் உறிநூலே என்பது தெற்றன விளங்கும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?