நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 30 January 2014

சேலம் பெயர்க்காரணம்


சேலம் - பெயர்க்காரணம்
 
 
சேலம் மலைகள் சூழ்ந்து காணப்பட்டதால் சைலம் என்று அழைக்கப்பட்டு அது சேலம் என மருவியதாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இருந்ததால், சேரலம் எனப்பட்டு, சேலம் என மருவியதாகவும், சமண சமயத்தின் முக்கிய தளமாக இருந்ததால், சைலம் என அழைக்கப்பட்டு சேலம் என மருவியதாகவும் என பல்வேறு காரணங்கள் சேலத்தின் பெயருக்கு காரணமாக தெரிவிக்கப்படுகிறது. இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது. இந்த ஊரின் வடக்குப் பகுதியில் நாகர்மலையும், மேற்குப் பகுதியில் காஞ்சன மலையும் அமைந்துள்ளது. 

பிள்ளைப் பெருமாள் சிறை மீட்டான் கவிராயர் பாடிய சோழீசுரர் மல்லைக் கோவை நூலின் உரையாசிரியர் வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணி அவர்கள் கொங்கு நாட்டைச் சார்ந்த ஏழ்கரைநாட்டில் ஒன்றாக சேல நாட்டைக் குறிப்பிடுகிறார்.
 




(கொங்கு - தமிழ்நாட்டின் ஐந்து பிரிவுகளாயுள்ள நாடுகளில் ஒன்று ; தலைநகரத்தால் பெற்ற பெயர் கொங்கு)

ஏழ்கரை நாடுகள்




1. திருச்செங்கோட்டு நாடு

2. பூவாணியநாடு (தாரமங்கலநாடு)

3. சேல நாடு

4. இராசிபுர நாடு

5. கீழ்கரை அரைய நாடு
6. பருத்திப்பள்ளி நாடு
7. ஏழூர் நாடு
 

சேலம் என்ற சொல்லை சேலத்திற்கு வைத்தவர்கள் தேவாங்கர்கள்தான் என்று  தேவாங்க இனத்தவர் கூறிக்கொள்கின்றனர். ,இது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் இரண்டு.

சேலமும்ஸ்ரீசைலமும்:-
          காரணம்-1

தேவாங்க ஜகத்குரு பீடங்கள் ஐந்தனுள் இரண்டாவது பீடம் ஸ்ரீசைலம்.  இன்று இப்பீடாதிபதிகள் ராஜமுந்திரியில் வசிக்கின்றனர்.    சேலம் என்ற பெயரைத் தேவாங்கர்கள்தான் சூட்டியுள்ளனர்.  “சேலாஜின குசுமோ” என்பது கீதையின் வரி சேலா என்பதற்குப் பட்டு வஸ்திரம் என்று ஸ்ரீமத் ராமானுஜர் பொருள் கொண்டுள்ளார்.  எனவே,ராமானுஜர் காலமான சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு தேவாங்கர் இங்கு பட்டு வஸ்திரம் நெய்து வாழ்ந்து இருந்தனர் என்று தெரிகின்றது.     சிலப்பதிகாரத்திற்கு முந்தையது பெருங்கதை என்ற உதயணன் சரிதம்.  இக்காவியத்தில் சேலம் திருத்தி என்ற தொடர் வருகின்றது.    சுமார் 1500  ஆண்டுகட்கு முற்பட்ட பண்டைய உரையாசிரியர் ஒருவர் பெருங்கதைக்குக் குறிப்புரை எழுதியுள்ளார்.  அவர் சேலம் என்ற சொல்லுக்கு சேல் வடிவமைந்த சேலைகளை நெய்வோர் வாழும் ஊர் என்று எழுதி இருக்கின்றார்.     சேல் என்றால் கெண்டை மீன்.  மீன் வடிவங்களை சேலையில் அமைத்து நெய்து வாழ்ந்து இருக்கின்றனர் நம் குல முன்னோர்.  சிலப்பதிகாரத்தின் பண்டைய உரையாசிரியர் ஆன அடியார்க்கு நல்லார் தம் உரையில் ஆடைவகைகளைக் குறிப்பிடும் பொழுது தேவாங்கம் என்று குறிப்பிடுகிறார்.      பண்டைய நாளில் தேவாங்கர் குடிபெயரும் பொழுது ஒற்றைக் குடும்பமாகக் குடிபெயர்வது இல்லைஇதற்குக் காரணம் நெசவுத் தொழிலே ஆகும்.      அதிகாலை விடிந்ததும்விடியாததுமாக மடிப்புக் கட்டுவது நம் வழக்கம்குளிர்க்காற்று நீங்கி வெயில் உறைக்க ஆரம்பித்தால்பாவு நூல்கள் ஒன்றோரு ஒன்று பின்னி விடும்.  அப்படி ஆயின் நெய்வதற்குச் சிரமம்.   இன்றும் ஒரு மடிப்பை நீட்டி அதைச் சுற்றுவதற்குக் குறைந்தது மூன்று பேர் தேவை.  இக்காரணத்தால் நம்மவர் குடிபெயரும் பொழுதுதேவாங்கர் வாழ்ந்த பகுதிக்கு மட்டும் தான் குடியேறுவார்.  அல்லது பல குடும்பங்களாக தொழில் முறைக்காகக் குடிபெயர்ந்து உள்ளனர்.  
 காரணம்-2
குளிர்ந்த காற்றினுக்குக் கன்னடத்தில்,   ‘சைலகாளி‘ என்று பெயர்.  ‘சைல‘ என்ற சொல் மலையையும்  குறிக்கும்.   குளிச்சியையும் குறிக்கும்.   இம்மாவட்டத்தில் குடியேறிய தேவாங்க மக்கள் சேர்வராயன் ஏற்காடு மலையின் குளிர்ந்த காற்றையும்,  மலைப் பகுதியையும் கருத்தில் கொண்டு இங்குக் குடியேறி இருக்கின்றனர்.  தங்களின் குருபீடத்தையும் மலையையும் குளிர்ந்த காற்றினையும் கருத்தில் கொண்டு சைலம் என்று பெயரிட்டு மகிழ்ந்து உள்ளனர்.  இதுவே பிற்காலத்து சேலம் என்று மருவி இருக்கின்றது.


ஆதாரம் .http://sribalajispeednet.blogspot.in/2012/01/blog-post_6955.html

தேவாங்கர்கள் கூறும் செய்திக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.
நெசவுத்தொழிலை தேவாங்கர்கள் மட்டும்தான் மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை. அது பல இனத்தவரும் மேற்கொண்டிருந்த, மேற்கொண்டிருக்கும் தொழில் ஆகும்.

சேர அரசர்களில் அரைய இனத்தவர் ,பொறைய இனத்தவர் என்ற இருபிரிவினர் உண்டு. அதில் அரைய இனத்தவர் அரசாண்ட  பகுதி என்பதால்தான் சேலம் பகுதியைச் சூழ்ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைக்கு சேர அரையர் மலை (சேர்வராயன்மலை )எனப் பெயரிட்டுள்ளனர். அந்த அடிப்படையிலேயே சேரலம் என இப்பகுதி வழங்கப்பட்டிருக்கலாம்.சேர நாட்டின் கிழக்கு எல்லையாக இப்பகுதி இருந்ததால், சேரலம் எனவழங்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும்,இந்நகரைச் சுற்றி முழுவதும் மலைகள் அமைந்துள்ளது.சைலம் என்பதற்கு மலைகள் என்ற பெயருண்டு. மலைகள் சூழ்ந்திருக்கின்ற காரணத்தால் சைலம் எனப்பட்டு சேலம் எனவும் வழங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
சிறப்புப்பெயர்

சேலத்திற்கு மாம்பழ நகரம் என்ற பெயரும் உண்டு. இந்நகரில் லாரி கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பு, பாக்ஸைட் தயாரிப்பு, நெசவுத் தொழில் போன்ற தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.வணிகத்துறையில் சிறந்து விளங்குsம் சேலம் தமிழ்நாட்டின் இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்தில் உயிர்நாடியாக விளங்குகிறது. புகழ்பெற்ற சேலம் உருக்காலை தற்போது தனியாரிடம் ஒப்படைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சேலத்தில் சாயத்தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலைகளும் உள்ளன.
.
 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?